தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் ஒருங்கிணைக்கும் வண்ணமாக தமிழகம் முழுவதும் மா உலா திட்டத்தை பரவலாக்கும் முயற்சிகளில் மா உலா நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கான முயற்சியில் முதற்கட்டமாக மா உலா அறக்கட்டளை தொடங்கப்பட்டு இதன் மூலம் மா உலா ஓட்டுனர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது.
மா உலா அறக்கட்டளையும் மா உலா நிர்வாகமும் இணைந்து தமிழகம் முழுவதும் மா உலா திட்டத்தை பரவலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய போக்குவரத்து சேவை அதிகம் தேவைப்படும் மாவட்டங்களில் மா உலா திட்டத்தினை செயல்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.
மா உலா (மாற்றுத்திறனாளிகளின் உலா) என்ற நிறுவனம் கடந்த 2016 ஜனவரியிலிருந்து தனது சேவையை துவக்கியது. மேலும் மா உலா நிறுவனம் பல்வேறுபட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனமானது கால்கள் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால் இந்த மா உலா நிறுவனமானது இதுவரை மூன்றரை ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளிடமிருந்து ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் கல்வி அளவிலும் பொருளாதார அளவிலும் சமூகத்தில் பின்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகவே அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த மா உலா என்ற நிறுவனத்தை ஏற்படுத்தி மாற்றுத்திறனாளிகளுக்காக சேவையாற்றி வருகிறது. இந்த திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுவதோடு மாற்றுத்திறனாளிகள் தன்மானத்தோடு வாழ வழிவகுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை, ஏனெனில் இதில் இணைந்து செயல்படும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எந்தவிதக் கட்டுப்பாடும் மா உலா நிர்வாகத்தால் விதிக்கப்பட்டதில்லை, எவருடைய தயவும் இல்லாமல் அவர்கள் சமூகத்தில் தன்னம்பிக்கையோடு பொருளீட்டி வாழ வழிவகை செய்யும் இந்த சேவையை மூன்று ஆண்டுகளாக மா உலா நிறுவனம் சென்னையில் வெற்றிகரமாக செய்து வருகிறது.
மா உலா திட்டத்தின் வாயிலாக சென்னையில் மட்டும் சுமார் 60-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஊர்திகளில் பயனாளிகளை ஏற்றி பொருள் ஈட்டி வருகின்றனர், இவர்களுடைய வாழ்வாதாரமும் இதன் வாயிலாக பெருகி உள்ளது. அடுத்த கட்டமாக திருநெல்வேலியிலும் சுமார் 25 மாற்றுத்திறனாளிகள் மா உலா திட்டதின் மூலமாக பயன் பெற்று வருகின்றனர். அடுத்து வேலூர் மாவட்டத்தில் சுமார் 38 மாற்றுத்திறனாளிகள் மா உலா வாயிலாக பயனடைந்து வருகின்றனர். தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்தில் சுமார் 15 மாற்றுத்திறனாளிகள் மா உலா திட்டத்தின் வாயிலாக பயனடைந்து வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் திருச்சி, திண்டுக்கல், கோயமுத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, , மற்றும் ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் மா உலா திட்டத்தினை தங்கள் பகுதிகளில் செயல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை மா உலா நிர்வாகத்திடம் கோரியுள்ளனர். இவர்களுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு விரைவில் அந்த மாவட்டங்களில் மா உலா திட்டத்தினை விரிவுபடுத்த தேவையான நடவடிக்கைகளை மா உலா நிர்வாகம் மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துள்ளது.மேலும் இத்திட்டத்தினை அனைத்து மாவட்டங்களில் விரிவுபடுத்தினால் சுமார் 1000 முதல் 1500 மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் பயன்பெறும். மேலும் மாற்றுத்திறனாளிகள் தன்னம்பிக்கையோடு யாருடைய துணையுமின்றி பொருளாதார வளர்ச்சி பெற்று அவர்களுடைய வாழ்க்கையை ஒரு தன்னம்பிக்கை மிகுந்த வாழ்க்கையாக மாற்றக் கூடிய வலிமை மா உலா திட்டத்தினால் ஏற்படும்.